தமிழகத்தில் ரூ.507 கோடியில் 10,185 கால்வாய்கள், 809 நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடக்கம்
தமிழகத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ரூ.507 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் இன்று தொடங்க உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் உத்தரவின்படி, ஊரகப் பகுதிகளில் நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் புனரமைக்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.507 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தவும், மழைநீரைச் சேமிக்கவும், கிராமப்புறங்களில் நீர் வளத்தைப் பாதுகாக்கவும் இந்த சீரமைப்புப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இதன் மூலம் நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மேலாண்மை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பணிகளில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் பெருமளவில் பங்கேற்று ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் என்.ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்நிலைகளை பாதுகாப்பதில் அரசுடன் இணைந்து பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.



