ஆபரேஷன் சிந்தூர் பின்னணி குறித்து முதன்முறையாக விரிவாக பேசிய அஜித் தோவல்
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் வியூகங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விரிவாகப் பேசியுள்ளார். பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையின் நோக்கம் மற்றும் அதற்கான பின்னணி குறித்து அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பியதாக அஜித் தோவல் தெரிவித்தார். விமான நிலையத்திலேயே பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அப்போது முதலில் கள நிலவரங்களை கேட்டறிந்த பிரதமர், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதுதான் தனது முதல் கேள்வியாக எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தீவிரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் உறுதியான உத்தரவை வழங்கியதாக தோவல் தெரிவித்தார். இந்திய உளவு அமைப்புகள் மேற்கொண்ட சிறப்பான பணியின் காரணமாக, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட தீவிரவாதிகளை குறுகிய காலத்திலேயே கண்டறிந்து, துல்லியமான நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நாடு தயாராக இருந்ததாகவும் அஜித் தோவல் தெரிவித்தார். இந்தியாவின் பொறுமையை அதன் பலவீனமாக யாரும் கருதக்கூடாது என்பதே நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்தியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் தீவிரவாதிகள் சவால் விடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், அந்தச் சம்பவத்திற்கு கடுமையான பதிலடி அளிப்பது அவசியமாக இருந்ததாகவும் தோவல் விளக்கினார்.
தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதையோ அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்பதை பாகிஸ்தான் ராணுவத்துக்கு உணர்த்தும் நோக்கமும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு இருந்ததாக அஜித் தோவல் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முதன்மை இலக்காக இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவ திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்ததாக அஜித் தோவல் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் தீவிரத்தையும், தீவிரவாதத்திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டையும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.



