ஆர்.ஜி. கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், உடலை அவசரமாகத் தகனம் செய்ய உதவியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நிர்மல் கோஷ் உள்ளிட்ட 3 பேரை பராக்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பானிஹாட்டி கவுன்சிலர் சோமநாத் டே மற்றும் சஞ்சீவ் முகர்ஜி ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் கைது செய்யப்பட்ட நிர்மல் கோஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தினர் அவர் மீது முட்டைகள் மற்றும் சேற்றை வீசியதுடன், அவரை நோக்கி “திருடன்” என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் நிர்மல் கோஷுக்கு ஹெல்மெட் அணிவித்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் செருப்புகள் மற்றும் காலணிகளால் செய்யப்பட்ட மாலைகளை வீசி அவரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முதன்மை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, கொலைக்குப் பிறகு முக்கிய ஆதாரங்களை மறைத்ததாகவும், உடலை அவசரமாகத் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பராக்பூர் காவல் ஆணையரகம் தனியாக புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்த புதிய வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நிர்மல் கோஷ், சோமநாத் டே மற்றும் சஞ்சீவ் முகர்ஜி ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.



