முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாக கூறப்படும் அவதூறான கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரை விமர்சனத்துக்குள் கொண்டு வருவது ஜனநாயக அரசியலுக்கு ஏற்றதல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நயினார் நாகேந்திரன் எந்த இடத்தில் இருந்து, எவ்வாறு பேசுகிறார் என்பது புரிகிறது என்றும், அவர் சார்ந்துள்ள அரசியல் நிலை படிப்படியாக தேய்ந்து வருவதாகவும் விமர்சித்தார். அமைச்சர் ராஜ்மோகன், பாஜக மாநிலத் தலைவர் அரசியல் தலைவருக்குரிய முறையில் பேசாமல் தெருமுனைப் பேச்சாளரைப் போல கருத்து தெரிவித்துள்ளதாகவும், பாஜகவினரும் திமுகவினரைப் போல அவதூறான பேச்சுகளை முன்வைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் வன்னியரசு, பெண்களுக்கு எதிரான வெறுப்பும் அவதூறும்தான் பாஜகவினரின் அரசியல் பேச்சின் அடிப்படையாக இருப்பதாகக் கூறி, நயினார் நாகேந்திரன் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பொறுப்பற்ற வகையில் கருத்துகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, உதயநிதியைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
தவெக செய்தித் தொடர்பாளர் மு.சவுந்தர ராஜா கூறுகையில், அரசியலில் இருப்பவர்கள் தங்களது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், கொள்கைகளை விமர்சிக்கவும் ஆட்சியின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பவும் ஜனநாயகத்தில் உரிமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால், அரசியல் விமர்சனத்துக்குள் குடும்பத்தினரை இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு ஏற்ற நடைமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, தமிழக முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தரக்குறைவானதும் அருவருப்பானதுமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு வந்ததற்குக் காரணம் ஒரு பெண்ணும் தாயும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பெண்களை மதிப்பது பாஜகவின் அரசியல் அணுகுமுறையில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை என்றும் விமர்சித்தார். இதே விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



