ஈரான் அச்சுறுத்தல் எதிரொலி: உணவு லாரியில் ரகசியமாக பயணம் செய்த அதிபர் ட்ரம்ப்
ஈரான் தரப்பில் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உணவு ஏற்றிச் செல்லும் லாரியில் ரகசியமாக பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை குறித்து ஒரு சில மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டபோது, கத்தார் அரச குடும்பம் வழங்கியிருந்த சொகுசு ஜெட் விமானத்தை ட்ரம்ப் பயன்படுத்தவில்லை. அதேபோல், வழக்கமாக அதிபரின் பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலும் அவர் பயணம் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்காராவில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ட்ரம்ப் ஏறியபோது, அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர். செய்தியாளர்களை நோக்கி கையசைத்தபடி அவர் விமானத்துக்குள் சென்றார். பின்னர் அதே விமானத்தில் செய்தியாளர்களும் ஏறி தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். இதையடுத்து அவர்கள் இருந்த பகுதியின் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டன.
போர்க்காலம் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் சூழ்நிலைகளில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்பதால், ஈரான் அச்சுறுத்தல் காரணமாகவே கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்கலாம் என செய்தியாளர்கள் கருதினர். ஆனால், அதன்பிறகு நடந்த சம்பவம் அவர்களுக்கு தெரியாமல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ட்ரம்ப் கீழே இறங்கியதாகவும், பின்னர் உணவு ஏற்றிச் செல்லும் லாரியில் ரகசியமாக பயணம் செய்து, சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த சி-32ஏ ராணுவ விமானத்துக்குச் சென்று அதில் மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ராணுவத்தால் அதிபர் ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பயணத்தை யாருக்கும் தெரியாத வகையில் மாற்றி, மாற்று விமானத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரகசிய நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்த அதிபர் மாளிகை அதிகாரிகள் பலருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மூத்த அதிகாரிகளில் சிலருக்கு மட்டுமே உண்மை நிலவரம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



