ஈரான் அச்சுறுத்தல் எதிரொலி: துருக்கியில் இருந்து ரகசியமாக ராணுவ விமானத்தில் சென்ற ட்ரம்ப்
கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். மாநாடு நிறைவடைந்த பின்னர், ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் இருந்து அவர் வழக்கமான விமானத்தில் அல்லாமல், ராணுவ விமானம் மூலம் ரகசியமாக வெளியேறியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த மோதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்துக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் பயண பாதுகாப்பு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கி பயணத்தின்போது கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தை ட்ரம்ப் பயன்படுத்தியிருந்தார். ஆனால், துருக்கியில் இருந்து அவர் புறப்பட்டபோது, அமெரிக்க அதிபரின் வழக்கமான பழைய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம் பயன்படுத்தப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. இதனால், ட்ரம்ப் பயன்படுத்தி வந்த புதிய விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
ரகசியமாக நடைபெற்ற பயணம்
அப்போது துருக்கியில் இருந்து ட்ரம்ப் பழைய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் புறப்பட்டதாக ஊடகங்களும் செய்தியாளர்களும் நம்பினர். இதுதொடர்பான காட்சிகளும் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ட்ரம்ப் அந்த விமானத்தில் நேரடியாக பயணம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
மாறாக, விமானத்தில் இருந்து விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் இலகுரக சரக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் சிறிய ரக ராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் மூலம் அவர் முதலில் பிரிட்டனுக்கு சென்றதாகவும், அங்கிருந்து தனது வழக்கமான விமானத்தில் அமெரிக்காவுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்ட சூழ்நிலையில், ட்ரம்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூன்றாவது விமானம் மூலம் துருக்கியில் இருந்து அவர் ரகசியமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் தகவல் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.



