ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவிப்பு; மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு அமெரிக்கா இணக்கம்
மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், போர் நிறுத்தம் மூலம் நிலையான தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அண்மைக் காலமாக மீண்டும் தீவிரமடைந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் ராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி மையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், ஈரானும் பல மத்திய கிழக்கு நாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அச்சங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போர் நிறுத்த முயற்சிக்கு இஸ்ரேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர். அதேநேரத்தில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் பாதுகாப்புத் துறையும் தங்களது ராணுவம் முழு தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், குவைத் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் பிராந்திய அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னரே இந்த போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



