கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என்றும், இந்தச் சம்பவத்தை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், மாணவர் அமுதன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், 100 நாள் சாதனை எனக் கூறும் தவெக அரசு, இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், போதைப்பொருளுக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கோஷ்டி மோதல் என அமைச்சர் கூறுவது சரியல்ல என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்ததால்தான் மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறுவதாகவும், எனவே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். கோவை சம்பவத்தில் மைதானத்திலேயே வைத்து மாணவர் அமுதனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்து பேசுகையில், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு உண்மை நிலவரத்துக்கு மாறாக சித்தரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம் என்றும், எனவே இந்தச் சம்பவத்தை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
அமுதன் கொலை தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.



