ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பலை தாக்கினால் ஈரானுக்கு அமெரிக்கா கடும் பதிலடி தரும்: ட்ரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தீவிர மோதல் உருவாகியுள்ளதால், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக, இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்ற எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் எந்தவொரு சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும், அதற்கு அமெரிக்கா நிச்சயமாகப் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரானின் முந்தைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து கடுமையான பதிலடிகளை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
ஈரான் ஏவுகணை, ட்ரோன் அல்லது வேறு எந்தவொரு ஆயுதத்தைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு கப்பலைத் தாக்கினால், அதற்குச் சமமான அளவில் ஈரானில் உள்ள உள்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்று ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, ஈரானில் உள்ள முக்கியமான பாலம் அல்லது மின்நிலையம் மீது அமெரிக்கா தனது பதில் தாக்குதலைத் தொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பதில் தாக்குதல்களுக்கான முக்கிய இலக்குகளாக ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அல்லது அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளே இருக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் நேரடியாக எச்சரித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.



