புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்; விருதுகள் வழங்குகிறார்
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விருதுகளையும் அவர் வழங்க உள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற பின்னர், ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மேலும், தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளையும் அவர் வழங்குகிறார்.
விழாவுக்கு முன்னதாக காலை 8.30 மணியளவில் கோட்டை கொத்தளம் அருகே முதல்வர் விஜய் வருகை தருகிறார். அவரை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வரவேற்று, அங்கு பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் காவல்துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பார்வையிடுகிறார்.
இதைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் குடும்பத்தினர், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்லாளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம் மற்றும் சமூக சேவகர், கூட்டுறவு வங்கி, சமூகநல சேவை உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைநகர் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், சுதந்திர தின விழா நிறைவடையும் வரை காமராஜர் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தகைசால் தமிழர் விருது’ எம்.கிருஷ்ணசாமிக்கு?
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.கிருஷ்ணசாமிக்கு இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் இந்த விருதை வழங்குவார் என கூறப்படுகிறது.
எம்.கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் எம்.பி.யாகவும், மகள் சவுமியா அன்புமணி பாமக எம்.எல்.ஏ.வாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களை முன்னிட்டு, ஆளுநர் சார்பில் ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருப்பதுடன் கேரள ஆளுநராகவும் ஆர்.வி.அர்லேகர் செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் இன்று கேரளாவுக்கு செல்ல உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் சுதந்திர தின தேநீர் விருந்து நடைபெறாது என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



