கோவை கல்லூரி மாணவர் கொலை: அமைச்சர் திசை திருப்புகிறார் என பெற்றோர் கடும் கண்டனம்
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வேறு தகவல்களை கூறி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விவகாரத்தை திசை திருப்புவதாக மாணவரின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி – சுமதி தம்பதியின் மகன் அமுதன் (19). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அவர், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பருடன் நடந்து சென்றபோது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த சிலரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
கல்லூரியில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து அமுதன் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும், இதனால் மாணவர்கள் ஒரு பிரிவினர் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அமுதனை தாக்கிக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களிடையேயான முன்விரோதம் மற்றும் கோஷ்டி மோதலே கொலைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து அமுதன் தகவல் தெரிவித்ததே கொலைக்குக் காரணம் என குற்றம்சாட்டின.
இந்நிலையில், மாணவர் அமுதனின் பெற்றோர் கென்னடி – சுமதி ஆகியோர் நேற்று கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தங்களது மகன் கொலை சம்பவத்தை கோஷ்டி மோதல் எனக் கூறி அமைச்சர் ராஜ்மோகன் திசை திருப்புவதாக குற்றம்சாட்டினர்.
“கல்லூரிக்குள் நடைபெற்ற போதைப் பொருள் நடமாட்டத்தை காட்டிக் கொடுத்ததால்தான் எங்களது மகன் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கல்லூரி விடுதியில்தான் தங்கி படித்து வந்தார். 20 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு வந்து எங்கள் மகனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளது. இதை எப்படி கோஷ்டி மோதல் எனக் கூற முடியும்?” என்று பெற்றோர் கேள்வி எழுப்பினர்.
மேலும், மாணவர் அமுதனின் கொலைக்கு நியாயம் கிடைக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அமைச்சர் இவ்வாறு கூறுவது சரியல்ல என்றும், அவரது கருத்துக்கு தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும் 4 மாணவர்கள் கைது
இதனிடையே, மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, ஏற்கெனவே 5 மாணவர்களை கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
மதுரை ஒத்தக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராம் (21), லலித் ஆதித்யா (20), சந்தோஷ் (20), திருநகரைச் சேர்ந்த ஹரிஷ் பாண்டியன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவர்களில் ஹரிஷ் பாண்டியன் மற்றும் லலித் ஆதித்யா ஆகிய இருவரும் வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் கூறினர்.
கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த 10-ம் தேதி அமுதன் உள்ளிட்ட 6 பேர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்த மாணவர் தீபக்கின் அறைக்குச் சென்று அவர்களை தாக்கி செல்போனை பறித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அமுதனை எதிர்தரப்பினர் பிடித்து தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செல்போன் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமுதனின் நண்பர்களான பெரம்பலூரைச் சேர்ந்த ஹரிதாஸ் (18), விருதுநகரைச் சேர்ந்த உதயகுமார் (18) ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



