இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்: சென்னையில் 30 முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மண்டலத்தில் உள்ள 30 முக்கிய கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து (அன்னதானம்) நடைபெற உள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நாட்டின் நலன், அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணவருந்தும் வகையில் பொது விருந்து (அன்னதானம்) நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் நாளை 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் தமிழக அமைச்சர்கள் நேரில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை இந்து சமய அறநிலையத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, வடபழநி முருகன் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பங்கேற்கிறார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்கிறார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட்ராமன் கலந்து கொள்கிறார். வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பங்கேற்கிறார். பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபுவும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல், சென்னையில் உள்ள 30 முக்கிய கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக மேற்கொள்ளுமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



