தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.1.07 லட்சம் கோடி திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தவெக அரசின் முதலாவது முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கை குறிக்கும் லோகோ முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அவரது முன்னிலையில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
தூத்துக்குடியில் ரூ.250 கோடி முதலீட்டில் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிக்கும் திட்டத்துக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதேபோல், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் திரவ உந்துவிசை ஏவுகலன்களை ஒருங்கிணைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டது.
கிருஷ்ணகிரியில் ரூ.779 கோடி முதலீட்டில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக அல்ட்ராவயலெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. காஞ்சிபுரத்தில் ரூ.5,143 கோடி முதலீட்டில் ஆலையை விரிவுபடுத்தும் திட்டத்தை ஜே.கே. டயர் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. மேலும், ஒரகடத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில் வணிக வாகனங்கள் உற்பத்தி மையத்தை மேம்படுத்துவதற்காக ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
கோவையில் ரூ.2,500 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் மின்னணு உதிரிபாகங்கள் ஆலையுக்கும், ரூ.838 கோடி முதலீட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஸ்ரீசிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆலைகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் ரூ.4,476 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், 5,074 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2,676 கோடி முதலீட்டில் 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 5 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நெல்லையில் விக்ரம் சோலார், திருவண்ணாமலையில் ராக்வுல், திண்டிவனத்தில் சென்னை எஸ்எஸ்எஸ்எஸ் எக்யுப்மெண்ட்ஸ், தஞ்சையில் வேல்முருகன் ஹெவி இன்ஜினீயரிங் மற்றும் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிச்சலின் நிறுவனங்களின் ஆலைகள் தொடங்கி வைக்கப்பட்டன.
மாநாட்டின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் முதலீடுகள், உற்பத்தித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏற்கெனவே தயாராகியிருந்த பல்வேறு திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.



