சுதந்திர தினத்தில் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றாததால் தவெகவுக்கு சர்ச்சை
சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு தேசியக் கொடி ஏற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் எம்எல்ஏ அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவது நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு அந்த நிகழ்வு நடைபெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது.
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினோத், தற்போது வேளாண்மைத்துறை அமைச்சராக உள்ளார். இதனால் அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அலுவலக வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.
இதனால் எம்எல்ஏ அலுவலக வளாகம் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டதாக கூறப்படுகிறது. தேசியக் கொடி ஏற்றப்படாத சம்பவம் தவெகவினர் மட்டுமின்றி, பிற கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினம் போன்ற முக்கியமான நாளில் வழக்கமான நிகழ்ச்சி நடைபெறாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதால், அமைச்சர் வினோத்தை சென்னைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தனர். இதன் காரணமாக வினோத் சென்னை சென்றுவிட்டதாகவும், அதனால் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றும் கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.



