தேசியக் கொடியுடன் பேரணிக்கு மறுப்பா? கோவை பாகிஸ்தானா, ஆப்கானிஸ்தானா: உயர் நீதிமன்றம் கேள்வி
கோவையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறையின் முடிவு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசியக் கொடியை ஏந்தி அமைதியான முறையில் பேரணி செல்வதற்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, பேரணி நடத்த கோவையின் பிரதான சாலையில் அனுமதி கோரப்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
அனுமதி கோரப்பட்ட பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் இருப்பதுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் இருப்பதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியவில்லை என காவல் துறை தரப்பு தெரிவித்தது. மேலும், அந்த குறிப்பிட்ட வழித்தடம் ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாத பகுதியாக இருப்பதாகவும், அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாதிடப்பட்டது.
மேலும், கட்சி சார்பில் அந்த குறிப்பிட்ட பகுதியில் ஊர்வலம் நடத்துவதற்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவையில் 12 பகுதிகளில் காவல் துறை அனுமதி வழங்கும் இடங்களில் பேரணி நடத்த முடியும் என்றும், தேசியக் கொடியை ஏந்துவதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி உயிர்நீத்ததை சுட்டிக்காட்டி, தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்வதற்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அமைதியான முறையில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லவே அனுமதி கோரப்படும் நிலையில், அதற்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என்றும் நீதிபதி வினவினார்.
மேலும், தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்லும் கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். திராவிடர் கழகத்திற்கு ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை, பாஜகவுக்கும் அனுமதி இல்லை என்ற நிலையில், தவெகவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு கட்சியினர் மட்டுமே பேரணியில் பங்கேற்பார்களா, மற்றவர்கள் பங்கேற்க மாட்டார்களா என்றும் நீதிபதி வினவினார்.
பேரணிக்கு அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணத்தை காவல் துறை தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். நாட்டின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏந்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சரியானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த அணுகுமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார். தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, காவல் துறை அனுமதி வழங்கியுள்ள மாற்று இடங்களில் பேரணி நடத்துவது தொடர்பாக காவல் துறையினருடன் கலந்தாலோசித்து முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.



