சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் திறப்பு
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த புதிய ஓடுதளத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையான பயிற்சி வசதிகளை ஏற்படுத்துவதுடன், மாவட்டந்தோறும் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 3 மாதங்களில் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடகள எறிதல் மையங்கள், செயற்கை இழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதலமைச்சர் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.31 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. மேலும், ராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38.24 கோடி மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம் மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று திறந்து வைத்தார். புதிய ஓடுதளம் மூலம் தடகள வீரர்களுக்கு தரமான பயிற்சி வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



