“மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; தமிழக அரசுக்கு ஆதரவாக இருப்போம்” – மாணிக்கம் தாகூர்
மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டத்தை தவிர்த்து, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பதே தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வழி என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தடையில்லை என கூறியிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பும், 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பும், காவிரி படுகை மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் எந்த புதிய கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
காவிரி நீர் தொடர்பான தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் கர்நாடக அரசு உரிய நீரை வழங்க மறுப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் அளவை கண்காணிக்கும் பிலிகுண்டுலுவுக்கு அருகே, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழ்பகுதியில் மேகேதாட்டுவில் ரூ.9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவதாகவும், இதனை தமிழக அரசு ஏற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், கர்நாடக அரசு 2019-ம் ஆண்டு மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ததாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுப்புவது தமிழகத்தின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தின் நலனை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மேகேதாட்டு அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.



