நீட்டிலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும்: ஆங்கில நாளிதழ் கட்டுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை முறைகளில் நிலவும் பன்முகத்தன்மையால் கல்வித் தரம் ஒருபோதும் பாதிப்படையாது என்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள விரிவான கட்டுரையில், அண்மைக்காலமாக வினாத்தாள் கசிவு விவகாரத்தால் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட நீட் தேர்வு அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்வு நடத்திய விதத்தில் உள்ள முறைகேடுகள் மட்டுமல்லாமல், ஒரு தேசிய நுழைவுத் தேர்வில் மாணவர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் அடிப்படைக் கொள்கையையே தமிழ்நாடு கேள்விக்குட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். நீட் அறிமுகப்படுத்தப்பட்டபோது பல நுழைவுத் தேர்வுகளின் சுமையைக் குறைத்தல், கேப்பிடேஷன் கட்டணத்தை ஒழித்தல் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துதல் ஆகிய 3 முதன்மை வாக்குறுதிகளை ஒன்றிய அரசு அளித்தது. ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளிலுமே நீட் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், கற்றலின் மையத்தைப் பள்ளிக்கூடங்களிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமாக உருவெடுத்துள்ள ‘கோச்சிங் சென்டர்களுக்கு’ நீட் மாற்றிவிட்டதாகவும், இதனால் வசதி படைத்தவர்கள் பயனடையக் கிராமப்புற, அரசுப் பள்ளி மற்றும் தாய்மொழி வழி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரே நுழைவுத் தேர்வை நம்பியிருக்காமல் பள்ளிக் கல்விச் செயல்திறன் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வில் பலமுறை தகுதிப் புள்ளிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டதே ‘தகுதி’ என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட மாயையை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைப்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநரும், மாநிலங்களின் கவலைகளைப் புரிந்துகொள்ளாமல் ஒன்றிய அரசும் செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) முறையை அவசரமாக மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், ஒற்றைத்துவ மனப்போக்கை கைவிட்டு மாநிலங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்து மருத்துவக் கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



