நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!
நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி சபரிவர்மன் என்பவரின் கொலை வழக்கு விசாரணை, விரிவான ஆய்விற்காகச் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த சபரிவர்மன், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாகத் தென்தாமரைகுளம் காவல்துறையினரால் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 13-ம் தேதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றத்தில் தொடர்புடைய சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் கைதிகள் 8 பேர் என மொத்தம் 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்டமாக நேசமணி நகர் காவல்துறையினர் இவ்வழக்கை விசாரித்து வந்த நிலையில், நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு முக்கியத் தடயங்களைக் கைப்பற்றினர். இதனிடையே, கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கருதப்படும் சபரிவர்மனின் செல்போன் சிறையிலேயே காணாமல் போனதால், அதனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் குடும்பத்திற்குத் தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம், அவரது மனைவிக்குத் தற்காலிக அரசுப் பணி, வீட்டுமனைப் பட்டா, வீடு கட்டுவதற்கும் மகனின் மேற்படிப்பிற்கும் தேவையான நிதியுதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன. இந்நிலையில், வழக்கில் உள்ள தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணையைச் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கைக் கையில் எடுத்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர், முதற்கட்டமாகச் சபரிவர்மனின் குடும்பத்தினரிடமும், அவரை முதலில் கைது செய்த தென்தாமரைகுளம் காவல் நிலையத்திலும் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சிறைக்குள் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைத்துக் உண்மைகளையும் வெளிக்கொண்டு வரச் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.



