தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கிட நீதிமன்றம் மறுப்பு!
தூத்துக்குடி: தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 20-ம் தேதி அவரைப் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதனிடையே, நீதிபதி சுமதி முன்னிலையில் நேற்று ஜாமீன் மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது, காவல்துறையினர் ஏற்கனவே போதுமான அளவு விசாரணை நடத்திவிட்டதால் போலீஸ் காவல் தேவையில்லை என எம்எல்ஏ தரப்பு வழக்கறிஞர்களும்; முதல்வர் குறித்து மிகக் கடுமையாகப் பேசியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனக் காவல்துறை தரப்பிலும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, இரு மனுக்களையும் தள்ளுபடி செய்யவே, மார்க்கண்டேயன் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், “நான் சிறையில் எவ்வளவு நாள் இருக்கிறேனோ, அவ்வளவு வேகத்தில் நாம் ஆட்சிக்கு வருவோம்; சிறையில் புத்தகங்களைப் படித்து நலமாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். இதனிடையே, பாளையங்கோட்டை சிறைக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், சிறையில் உள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏவைச் சந்தித்துப் பேசினர்.



