விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தக் கூடாது: செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி!
சென்னை: ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணை என்ற பெயரில் தங்களை வரவழைத்துத் துன்புறுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ‘முன்பகை காரணமாகத் தங்களை வேறு வழக்கில் கைது செய்யக் கூடும் என்ற அச்சம் உள்ளது என்றும், நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்குத் தங்களை அழைக்க வேண்டுமென்றால் சட்டப்படி முறைப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும்’ என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடைபெற்றது. அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், மனுதாரர்கள் பொத்தாம் பொதுவாக உத்தரவைக் கோருவதாகவும், காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால் விரிவான பதிலளிக்க அவகாசம் தேவை என்றும் வாதாடினார்.
அதேவேளையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “முன்ஜாமீன் பெற்றுள்ள மனுதாரர்கள் விசாரணைக்குத் தடங்கலாக இருக்கவில்லை. மாறாக, விசாரணை என்ற பெயரில் தங்களை அழைத்துத் துன்புறுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவைக் கோருகிறோம்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இவ்வழக்கில் சட்டப்பூர்வ நடைமுறைகளை சுட்டிக்காட்டித் தனது முக்கிய முடிவை அறிவித்தார்.
அதன்படி, “குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டும் மனுதாரர்கள் இன்னும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறவில்லை. இந்தச் சூழலில் தங்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் கோர முடியாது. மேலும், மற்ற வழக்குகளைப் பொறுத்தமட்டில் முன்கூட்டியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” எனக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



