முக்கியத் துறைகள் இல்லாததால் அதிருப்தி: புதுச்சேரி என்டிஏ கூட்டணிக்குள் மோதல் வெடித்தது
புதுச்சேரியில் பாஜக அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை முதல்வர் ரங்கசாமி ஒதுக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அடங்கிய பட்டியல் அரசிதழில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள புதுவையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டரை மாதங்கள் ஆகியும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே, நேற்று மாலை துணைநிலை ஆளுநரைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி இலாகா பட்டியலை வழங்கினார்.
பொதுவாகப் பட்டியல் வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்ற நிலையில், பாஜக அமைச்சர்களுக்குக் கடந்த முறை வழங்கப்பட்ட முக்கியத் துறைகள் மீண்டும் ஒதுக்கப்படாததால், பாஜக தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகத் தெரிகிறது.
மேலும் பாஜக கேட்டுப் பெற்ற சபாநாயகர் பதவியை அதிமுகவிற்கு வழங்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டிருந்ததும் இப்போக்கிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசில் கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடுகள் வெளிப்படையாக வெடித்துள்ளன.



