காங்கிரஸ் விழாவில் வந்தே மாதரம் பாடலுக்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டபோது, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பாடலை நிறுத்துமாறு கூறியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகித்தார். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்ட நிலையில், பாடலின் இடையே சோனியா காந்தி சில சைகைகள் செய்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த கார்கே, ராகுல் காந்தியிடம் தகவல் தெரிவித்ததாகவும், பின்னர் ராகுல் காந்தி அருகில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவரை சோனியா காந்தியிடம் பேச அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ‘வந்தே மாதரம்’ பாடலை சோனியா காந்தி அவமதித்ததாக பாஜக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், சுதந்திர தினத்தன்று வெளியான இந்தக் காட்சி அவமானகரமானது என்று விமர்சித்தார். ‘வந்தே மாதரம்’ என்பது வெறும் பாடல் அல்ல என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், தேசிய உணர்வு மற்றும் தேசபக்தியின் வரலாற்றுச் சின்னம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்திற்கு உரிமை கோரும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், பாஜகவின் குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்தார். நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நாற்காலி வழங்குமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டிருந்ததாக அவர் விளக்கம் அளித்தார். ‘வந்தே மாதரம்’ பாடலை நிறுத்துவதற்காக அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 1937-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையும் ஜெயராம் ரமேஷ் சுட்டிக்காட்டினார். மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் கூட்டங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் தொடக்கப் பகுதிகளை மட்டும் பாட முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த விளக்கத்தை பாஜக ஏற்கவில்லை. வாக்கு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவத்தைப் பாடுவதை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தடுக்க முயன்றதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தேசிய கீதமான ‘ஜன கண மன’-க்கு இணையான அந்தஸ்தை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில நாட்களிலேயே இந்த விவகாரம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய சட்டத்தின் அடிப்படையில் முழுமையான தேசியப் பாடலுக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



