போட்டித் தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி: ஒரு கோடி இளைஞர்களுக்கு AI பயிற்சி அளிக்க திட்டம்
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் செலவிடும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் இலவச இணையவழிப் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். தங்களது குழந்தைகளை பயிற்சி மையங்களுக்கு அனுப்பாவிட்டால் அவர்கள் மற்ற மாணவர்களைவிட பின்தங்கிவிடுவார்கள் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் இந்த கவலைகளை கருத்தில் கொண்டு, பயிற்சி வகுப்புகளுக்காக அவர்கள் செலவிடும் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் கூறினார். இளைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் இருந்து அவர்களின் ஆதரவையும் அரவணைப்பையும் பெறுவதுடன், குடும்பங்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமை ஏற்படாத வகையிலும் இந்த முயற்சி அமையும் என அவர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச இணையவழிப் பயிற்சி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார். நாட்டில் ஏற்கெனவே உள்ள டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு மற்றும் திறமையான ஆசிரியர்கள், கல்வியாளர்களின் வளங்களை ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதற்கான விரிவான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவு துறையில் இந்திய இளைஞர்கள் உலக அளவில் முன்னணி திறனைப் பெறும் வகையில் புதிய திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார். அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் இளைஞர்களுக்கு மிக முக்கியமான பங்கு இருப்பதாக பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதே நேரத்தில், வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாகவும் இன்றைய இளைஞர்களே இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். எனவே, நாட்டின் வளர்ச்சி இலக்கை இளைஞர்களின் எதிர்காலத்துடன் இணைத்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கல்வி, போட்டித் தேர்வு தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்ப திறன்களில் அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.



