பிரிவினை துயரங்களை நினைவுகூர்ந்து நல்லெண்ணம், ஒற்றுமையை வலுப்படுத்துவோம்: பிரதமர் மோடி
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட துயரங்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரிவினை துயரம் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் மன உறுதியை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டம் வரலாற்றில் பலரது வாழ்க்கையைச் சிதைத்த ஒரு துயரமான தருணமாக இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குடும்பங்கள் வேரறுக்கப்பட்டதுடன், பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்ததாகவும், ஏராளமான மக்கள் அளவிட முடியாத துயரங்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த கடினமான சூழலைக் கடந்து மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொண்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார். எதுவுமில்லாத நிலையில் இருந்து மீண்டு, தங்களது இடர்களையே வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றிய அவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மனித மனதின் வலிமையை நினைவூட்டுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாள் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை தொடர்ந்து பேணிக்காப்பதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு எக்ஸ் பதிவில், பிரிவினையின் பயங்கரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வணக்கங்களை பிரதமர் தெரிவித்துள்ளார். கடினமான சூழ்நிலைகளிலும் துணிச்சல் மற்றும் மன உறுதியின் மூலம் தங்களது இலக்குகளை எவ்வாறு அடைய முடியும் என்பதை அவர்கள் நிரூபித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமை என்ற தேசிய உணர்வை இந்த நாளில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முயற்சிகள் மூலமே பல்வேறு திறமைகள் வெளிப்படுகின்றன என்றும், அச்சம் கொண்டவர்கள் மட்டுமே புலம்புவார்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



