“நட்பு தினம் போல் கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்” – பிரதமர் மோடி வேண்டுகோள்
இளைஞர்கள் நட்பு தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுவதைப் போல, இந்தியாவின் பாரம்பரியத்தையும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் போற்றும் வகையில் தேசிய கைத்தறி தினத்தையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1905-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை முன்னெடுக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் தொழிலையும் அதில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களையும் கௌரவிக்கும் முக்கிய நாளாக இது பார்க்கப்படுகிறது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அதில், இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடியதைப் போல, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில் கைத்தறி தினத்தையும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்திலும் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார். இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைப் பாதுகாத்து வரும் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை போற்றுவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் தொழிலை ஊக்குவிப்பதுடன், அதனை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வரும் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் பங்களிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் தேசிய கைத்தறி தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.



