370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் வளர்ச்சி அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்
இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய அரசியலமைப்பின் 370 மற்றும் 35(ஏ) பிரிவுகள் வரலாறாக மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் வளர்ச்சி பயணத்தில் இது ஒரு முக்கியமான புதிய அத்தியாயம் என்றும், 2019 ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பிறகு அப்பகுதி மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்துள்ளதாகவும், கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளில் இருந்து விலகி இருந்த பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர் தற்போது அதிகாரம் பெற்றுள்ளதாகவும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த ஆண்டில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்காக சியாமா பிரசாத் முகர்ஜி ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கனவு கண்டது ஆகஸ்ட் 5, 2019 அன்று வரலாற்று நிகழ்வாக நிறைவேறியதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களது இலக்குகளை அடைந்து, வளர்ந்த இந்தியா உருவாக்கத்தில் பங்களிக்கும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



