நாடு முழுவதும் 1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: 6 மாத ரகசியக் கண்காணிப்புக்குப் பின் மென்பொருள் பொறியாளர் கைது!
சென்னை: கடந்த 2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய வழக்கில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பணியாற்றி வந்தவருமான சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பவரையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர்.
வணிக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து இந்த அநாமதேய மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகப் பலமுறை வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டுப் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகிய நிலையில், அனைத்து மிரட்டல்களும் போலியானவை எனப் பின்னரே தெரியவந்தது. குறியாக்கம் செய்யப்பட்ட சேவைகள், VPN மற்றும் டார்க் வெப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தன் அடையாளத்தை மறைத்து இவர் மின்னஞ்சல்களை அனுப்பி வந்ததால், குற்றவாளியைக் கண்டறிவதில் தொடக்கத்தில் கடும் சிக்கல் நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் அப்போதைய எஸ்பி ஐ.ஷானாஸ் தலைமையிலான விசாரணையின் போது, மிரட்டல் மின்னஞ்சல் ஒன்றுக்குச் சரத் தவறுதலாகத் தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதில் அளித்ததால் அவரது டிஜிட்டல் தடயம் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக அவரது நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்த காவல்துறையினர், நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட் சர்குலர்’ பிறப்பித்தனர். இதன் அடிப்படையில், எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய அவரை இமிகிரேஷன் மற்றும் பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணைக் காவலில் எடுத்தனர்.
சரத் சுப்பிரமணியன் சங்கருக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை மட்டுமே நேரடியாக 33 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சதிச்செயலில் அவர் தனியாகச் செயல்பட்டாரா அல்லது அவருக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.



