“அரசியல் கருவியாக மாணவர்கள்…” – எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் தங்களது சுயநல ஆதாயத்திற்காக இளைஞர்களை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாகவும், அவர்கள் மத்தியில் செயற்கையான கொந்தளிப்பை உருவாக்குவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாணவர்களின் நலனிலும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எந்தவொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ள நிலையில், வீதிகளில் இறங்கிப் பிரச்சினையைத் தீர்க்க எதிர்க்கட்சிகள் முயல்வதாகச் சாடினார்.
செயற்கையாக உருவாக்கப்படும் இத்தகைய அதிருப்தி முயற்சியை முதிர்ச்சியுள்ள இந்திய இளைஞர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும், நாடாளுமன்றச் செயல்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



