புதுச்சேரி நல்லவாட்டில் துணிகரம்: வீட்டில் 45 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே நல்லவாடு மீனவ கிராமத்தில், கப்பல் நிறுவன ஊழியரின் வீட்டில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லவாடு மீனவ கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). இவர் மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முகுந்தாவதி, இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், நல்லவாட்டில் உள்ள குட்டியாண்டவர் கோயிலில் நேற்று ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முகுந்தாவதி தனது குழந்தைகள் மற்றும் சென்னையில் இருந்து வந்த உறவினர் ஒருவருடன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வீடு ஆள் நடமாட்டமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
திருவிழா முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பிய முகுந்தாவதி, வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களின் கதவுகளும் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சரிபார்த்தபோது, 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து முகுந்தாவதி அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டுக்குள் மர்ம நபர்கள் எவ்வாறு நுழைந்தனர், திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நல்லவாடு பகுதியில் சமீபத்தில் மற்றொரு வீட்டிலும் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.



