சுங்க அதிகாரி என நடித்து ரூ.12 லட்சம் தங்க நெக்லஸ் பறிப்பு: சென்னை விமான நிலையத்தில் இளைஞர் கைது
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரி என போலியாக நடித்து, விமான பயணியிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் தங்க நெக்லஸை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, குற்றவாளி தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
போலீஸார் தெரிவித்த தகவலின்படி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நந்தகோபால் (23), கோவையில் இருந்து விமானத்தில் வந்த பெண் ஒருவரிடம் இருந்து தங்க நெக்லஸ் அடங்கிய பார்சலை பெற்றுக் கொண்டு, சென்னை விமான நிலைய டெர்மினல்-1 பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தன்னை சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி, இருவரையும் மிரட்டி தங்க நெக்லஸை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், சுங்க அதிகாரிகள் மற்றும் சென்னை விமான நிலைய போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையில், திருச்சியைச் சேர்ந்த சையது முஷ்ரப் (23) என்பவர் வழக்கறிஞருடன் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஆஜராகி சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து ரேபிட்டோ ஓட்டுநராகவும், விமான நிலையத்தில் வாடகை கார் சேவைக்கான புரோக்கராகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். சம்பவத்தன்று தங்க நெக்லஸை கையில் வைத்திருந்த நபர்களைக் கண்டதும், சுங்க அதிகாரி போல நடித்து நகையை பறித்துச் சென்றதாகவும், போலீஸார் தன்னை தேடி வருவதை அறிந்ததால் தானாகவே சரணடைந்ததாகவும் கூறியுள்ளார்.
அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க நெக்லஸை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து சையது முஷ்ரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.



