சென்னையில் ராசியான நகை எனக்கூறி கவரிங் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி: மாயமான பெண்ணுக்கு போலீஸ் வலை
சென்னை:
சென்னை வியாசர்பாடி டி.டி. பிளாக் பகுதியைச் சேர்ந்த சுதா (40) என்பவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, 2 வயது குழந்தையுடன் வந்த 25 வயதுடைய பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தான் ஈரோட்டைச் சேர்ந்தவர் என்றும், கணவருடன் ஏற்பட்ட கோபத்தில் சென்னை வந்ததாகவும், தற்போது தன்னிடம் பணமில்லாததால் தனது 7 கிராம் தங்க நகையை அடகு வைத்துப் பணம் தருமாறும் அப்பெண் சுதாவிடம் உதவி கேட்டுள்ளார்.
இதனை நம்பிய சுதா, அப்பெண்ணை அருகிலிருந்த அடகுக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அடகுக் கடை உரிமையாளர் அந்த நகையைப் பரிசோதித்து, அது உண்மையான தங்கம் தான் என்றும் அதற்கு ரூ.27,000 தருவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அந்தப் பெண் சுதாவை தனியாக அழைத்துச் சென்று, இந்த நகை தனக்கு மிகவும் ராசியானது என்பதால் அடகு வைக்க விருப்பமில்லை எனக் கூறி, ரூ.27,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு நகையை சுதாவிடமே கொடுத்துவிட்டு குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்பெண் சென்றதும் சந்தேகமடைந்த சுதா நகையை மீண்டும் கடையில் காட்டியபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. அடகுக் கடையில் காண்பித்த உண்மையான நகையை மாற்றி, கவரிங் நகையைக் கொடுத்து மோசடி செய்ததை உணர்ந்த சுதா உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவான பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



