கேரள RSS நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு: 4 ஆண்டுகளாகத் தேடப்பட்ட PFI நிர்வாகி டெல்லியில் NIAவால் கைது!
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த RSS நிர்வாகி சீனிவாசன், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் கேரள காவல்துறை விசாரித்து 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த நிலையில், சம்பவத்தின் தீவிரத்தன்மை காரணமாக விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், இந்தச் சதியின் முக்கிய சூத்திரதாரியாக தடைசெய்யப்பட்ட PFI அமைப்பின் பாலக்காடு மாவட்டத் தலைவராக இருந்த முஹமது அலி செயல்பட்டது தெரியவந்தது.
கொலைக்குப் பிறகு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற முஹமது அலி மீது IPC மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ₹3 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டதோடு, இன்டர்போல் மூலம் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை, ரகசியத் தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முஹமது அலியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கடந்த 4 ஆண்டுகளாகச் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பதுங்கியிருந்ததும், 2047-க்குள் இந்தியாவில் குறிப்பிட்ட ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் PFI அமைப்பு செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக ‘யோகா மற்றும் உடற்பயிற்சி’ என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டதும், உளவு சேகரிக்க ‘ரிப்போர்ட்டர்ஸ் விங்’ மற்றும் தாக்குதல்களை நடத்த ‘சர்வீஸ் டீம்’ போன்ற பிரிவுகள் செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இவருடன் சேர்த்து இவ்வழக்கில் கைதானோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது.



