நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை: கைதான 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் (33), நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 8 கைதிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர்.
முன்னதாக, சபரிவர்மன் நடத்தி வந்த பெட்டிக்கடையில் தென்தாமரைகுளம் போலீஸார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சட்டவிரோதமாக புகையிலை விற்றதாகக் கூறி சபரிவர்மன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அதிகாலை சபரிவர்மன் சிறைக்குள்ளேயே கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். உடற்கூறாய்வு மற்றும் முதற்கட்ட விசாரணையில் அவரது உடலில் 19 இடங்களில் பலமான காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டதுடன், 3 சிறை வார்டன்கள் மற்றும் 8 கைதிகள் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியது வெளிச்சத்திற்கு வந்தது.
இச்சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறை வார்டன்கள் ஜெகன், திருமலைநம்பி, சிவக்குமார் மற்றும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் வார்டன்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கைதிகள் 8 பேரும் தற்போது பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



