குன்றத்தூர் அருகே காவலரைக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய ரவுடி காலில் சுட்டுப் பிடிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு ரவுடி கருப்பு என்கிற தமிழழகு (28) என்பவரைப் போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். மேலும் அவருடன் இருந்த நண்பர் சூர்யா (24) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழழகு மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, போதைப்பொருள் வழக்குகள் என 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவருடன் பிடிபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சூர்யா மீது கொலை முயற்சி, கொலை மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் 6 வழக்குகள் இருப்பதாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் காவனூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த ஆயுதங்களை மீட்கப் போலீஸார் அவர்களை அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது தமிழழகு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமைக் காவலர் விஜயகுமாரின் வலது கையில் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். இதனால் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தற்காப்புக்காகத் தனது துப்பாக்கியால் தமிழழகின் வலது கணுக்காலில் சுட்டுப் பிடித்தார்.
இச்சம்பவத்தை அடுத்து தமிழழகிடமிருந்து இரண்டு கத்திகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்து கலவை, சணல், தவிடு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி தமிழழகு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், கத்திக்குத்துக்கு உள்ளான தலைமைக் காவலர் விஜயகுமார் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் திருமுடிவாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



