சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியைப் பிடிக்க முயன்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு
சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பூபாலன் என்பவர், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாகச் சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்போன் சிக்னல் உதவியுடன் அவசியமான தடையங்களைக் கொண்டு போலீஸார் அவரை தீவிரமாகப் பின்தொடர்ந்து சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) வெங்கடேஷ் உட்பட இரு போலீஸார் அத்திப்பட்டு பகுதியில் பூபாலன் பதுங்கியிருந்த வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து அவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பூபாலனின் கூட்டாளிகள், எதிர்பாராத விதமாக உதவி ஆய்வாளர் வெங்கடேஷின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், உடனடியாக மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அதில் குற்றவாளி பூபாலன் அத்திப்பட்டு பகுதியில் ரகசியமாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளிகளைக் கைது செய்ய அப்பகுதியில் உள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், மீஞ்சூர் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.



