உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் சரிகிறதா? சீனா எழுச்சியால் அதிகரிக்கும் கேள்வி
உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள் பட்டியலில், வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் சீனா ஏற்கெனவே அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக வங்கியின் கணிப்புப்படி, சீனாவின் பொருளாதார மதிப்பு 41.26 டிரில்லியன் டாலராகவும், அமெரிக்காவின் பொருளாதாரம் 30.77 டிரில்லியன் டாலராகவும் உள்ளது. இருப்பினும், சர்வதேச வர்த்தகம் மற்றும் உலக நிதி அமைப்பில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆதிக்கம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பது தற்போது சர்வதேச பொருளாதாரத்தில் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
டாலரின் எதிர்கால ஆதிக்கம் குறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் பேரி எய்ச்சன்கிரீன், ‘மணி பியாண்ட் பார்டர்ஸ்’ (Money Beyond Borders) என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். வரலாற்றைப் பார்க்கும்போது, ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கம் மாறிய பின்னரும், அந்த நாட்டின் நாணயம் சர்வதேச அளவில் நீண்ட காலம் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
சர்வதேச நாணயங்களின் வரலாறு
சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய நாணயங்களின் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து செல்கிறது. ஏதென்ஸின் ‘ஆந்தை’ நாணயங்கள் ஆரம்பகால சர்வதேச நாணயங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பின்னர் ரோமானியப் பேரரசின் நாணயங்கள் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டன் முதல் இந்தியா வரையிலான வர்த்தகத்தில் பைசான்டைன் தங்க ‘சொலிடஸ்’ நாணயமும் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் பின்னர் ஸ்பெயினின் ‘ரியால்’ சர்வதேச நாணயமாக உயர்ந்தது. 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகு பிரிட்டனின் ‘பவுண்ட் ஸ்டெர்லிங்’ உலக வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது. சர்வதேச வர்த்தக மையமாக பிரிட்டன் விளங்கியது, அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் காலனி ஆதிக்கம் ஆகியவை பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை அதிகரித்தன.
டாலரின் ஆதிக்கம் எவ்வாறு உருவானது?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச நிதி அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் 1944-ம் ஆண்டு அமெரிக்காவில் பிரெட்டன் வுட்ஸ் மாநாடு நடைபெற்றது. இதில் தங்கத்தின் மதிப்பு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டதுடன், பிற நாடுகளின் நாணயங்களும் டாலருடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் சர்வதேச நிதி அமைப்பில் அமெரிக்க டாலரின் நிலை மேலும் வலுவடைந்தது.
தற்போது சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 40 சதவீத பொருட்களின் விலைகள் டாலரை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார ஆதிக்கம் குறைந்த பின்னரும், அந்த நாட்டின் நாணயம் நீண்ட காலம் தனது சர்வதேச அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொள்ளும் என பொருளாதார வல்லுநர் எய்ச்சன்கிரீன் குறிப்பிடுகிறார்.
டாலரின் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணங்களாக, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய அதே அளவிலான வலுவான சர்வதேச நாணயம் இல்லாதது, அமெரிக்காவின் நிதி அமைப்பு மீதான நம்பிக்கை, உலக நாடுகளுடனான அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் ஆகியவை கூறப்படுகின்றன. அதே நேரத்தில் யூரோ மற்றும் சீனாவின் யுவான் ஆகியவற்றின் சர்வதேச பயன்பாடு இன்னும் டாலருக்கு இணையான அளவை எட்டவில்லை.
உலகளாவிய அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு சுமார் 57 சதவீதமாகவும், சர்வதேச பரிவர்த்தனைகளில் அதன் பங்கு சுமார் 90 சதவீதமாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தின் அளவைத் தாண்டி, உலக நிதி அமைப்பில் டாலரின் பயன்பாடே அதன் முக்கிய பலமாக தொடர்கிறது.
டாலர் ஆதிக்கம் குறையுமா?
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகள் மீதான சர்வதேச நம்பிக்கை குறைந்து, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பை மாற்று சொத்துகளுக்கு மாற்றத் தொடங்கினால் டாலரின் ஆதிக்கம் படிப்படியாக குறையக்கூடும். குறிப்பாக பிரிக்ஸ் (BRICS) நாடுகள் தங்களுக்குள் உள்ள வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
டிஜிட்டல் சொத்துகள், புதிய நிதித் தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்று சர்வதேச பரிவர்த்தனை முறைகளின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் டாலரின் பயன்பாட்டை பாதிக்கக்கூடிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இதனுடன் அமெரிக்காவின் நிதிக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் மீதான சர்வதேச மதிப்பீடும் டாலரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் வங்கித் தலைவர் ஜேமி டைமனும், அடுத்த 25 ஆண்டுகளில் அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைக்கத் தவறினால், டாலர் தனது ‘கையிருப்பு கரன்சி’ அந்தஸ்தை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
டாலருக்கு அதிகரிக்கும் சவால்கள்
டொனால்டு ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்தது மற்றும் பொருளாதாரத் தடைகளை பயன்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் சில நாடுகளிடையே டாலர் மீதான நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. அதேபோல், அமெரிக்க பெடரல் ரிசர்வின் சுதந்திரத்தில் அரசியல் தலையீடு ஏற்படும் என்ற அச்சமும் டாலருக்கு அழுத்தத்தை உருவாக்கக்கூடிய காரணியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசின் அதிகரித்து வரும் கடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் அரசியல் சூழல்கள், அதனால் உருவாகும் நிதிச்சுமைகள் ஆகியவையும் அமெரிக்க பொருளாதாரத்துக்கு சவாலாக உள்ளன. இதனிடையே சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்தில் அதிகமாக பயன்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், வளைகுடா நாடுகளும் டாலரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் வகையில் மாற்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கையிருப்பில் குறையும் டாலர்; அதிகரிக்கும் தங்கம்
2000-ம் ஆண்டில் உலக நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு சொத்துகளில் சுமார் 70 சதவீதம் டாலராக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 55 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பின்னர், ரஷ்யாவின் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகள் டாலர் சர்வதேச நிதி பாதுகாப்புக்கான கேடயம் மட்டுமல்லாமல், பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை சில நாடுகளிடையே உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பும் 4 டிரில்லியன் டாலரிலிருந்து 3.3 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதேவேளையில், பல நாடுகள் தங்களது கையிருப்பில் தங்கத்தின் அளவை அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில் தங்கத்தை எளிதாக பணமாக மாற்ற முடியும் என்பதால், தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பது டாலர் மீதான சார்பை குறைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இதனால் உலக பொருளாதாரத்தில் டாலரின் ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வரும் என்று கூற முடியாவிட்டாலும், சீனாவின் பொருளாதார எழுச்சி, பிரிக்ஸ் நாடுகளின் மாற்று வர்த்தக முயற்சிகள், தங்கத்தின் மீதான அதிகரிக்கும் நம்பிக்கை, அமெரிக்காவின் கடன் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை டாலருக்கு எதிர்காலத்தில் புதிய சவால்களை உருவாக்கக்கூடும்.



