மொஜ்தபா காமேனியின் வீடியோவை வெளியிட்ட ஈரான்: உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி?
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ மூலம் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை தொடர்பாக வெளியாகி வரும் பல்வேறு தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (56) புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து அமெரிக்காவின் தாக்குதலில் மொஜ்தபா காமேனி படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
பதவியேற்றது முதல் மொஜ்தபா காமேனி பொது நிகழ்ச்சிகளில் தோன்றவில்லை என்றும், அவரது சார்பில் எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், தனது தந்தையின் இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளும், ஊகங்களும் எழுந்தன.
இந்த சூழலில், மொஜ்தபா காமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலின் சேனல் 14 கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக தி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட முந்தைய செய்தியும், ஈரான் வயர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டியிருந்தது.
மேலும், “காமேனி விரைவில் தியாகி ஆனார் என்ற செய்தியைக் கேட்டால் ஆச்சரியப்பட மாட்டோம்” என்ற கருத்தையும் தி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டிருந்தது. இதனிடையே, அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், உச்ச தலைவருடன் நேரடியாக தொடர்பு கொள்வது மிகவும் கடினமாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மொஜ்தபா காமேனி தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் தற்போது வெளியிட்டுள்ளது. மெஹ்ர் செய்தி நிறுவனம் முதன்முதலில் வெளியிட்ட இந்த வீடியோ, அவரது உடல்நிலை குறித்து பரவி வரும் பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் வீடியோ வெளியான போதிலும், மொஜ்தபா காமேனியின் தற்போதைய உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்கள் தெளிவாகவில்லை.



