கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்: அரசுப் பணி அரசாணை ரத்துக்கு எதிரான மேல்முறையீடு 14-ல் விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, முதல்வராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10-ம் தேதி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாதகவின் தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார் மற்றும் பி.ஆனந்தஜோதி ஆகியோர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், தமிழக அரசு வழங்கிய பணி நியமன ஆணை கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு அல்ல என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளன. இதனால், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவு குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



