சமூக வலைதளத்தில் முதல்வர் குறித்து அவதூறு கருத்து: ஸ்ரீவில்லிபுத்தூரில் நூற்பாலை தொழிலாளி அதிரடி கைது
சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக, நூற்பாலை தொழிலாளி ஒருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தவெக பிரமுகர் கணேஷ்குமார் என்பவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவின் பின்னூட்டப் பகுதியில் (Comments) திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த நூற்பாலை தொழிலாளி சஞ்சய் ராமசாமி என்பவர் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட அந்த விபரங்கள், தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆகிய இருவரையும் தனிப்பட்ட முறையில் மிகவும் அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகளைத் தரக்குறைவாக விமர்சித்தது தொடர்பாகப் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த அவதூறுப் பதிவு குறித்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சஞ்சய் ராமசாமியைக் காவல் துறையினர் முறைப்படி கைது செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



