பழநி கோயில் நில மோசடி வழக்கு; சார்பதிவாளர், நிலத்தரகர் வீடுகளில் சிபிசிஐடி திடீர் சோதனை!
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், கடந்த ஜூலை 6-ம் தேதியன்று வெறும் 2 கோடி ரூபாய்க்கு இரு தனிநபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகப் பழநி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாகப் பழநி கோயில் இணை ஆணையர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பத்திரப் பதிவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனடிப்படையில், சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களாகப் பழநி தேவஸ்தான அலுவலகம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்த நில மோசடி வழக்கு தொடர்பாக இன்று (ஜூலை 18) அதிகாலை 4 மணி முதல் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீடு, நிலத்தை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்களில் ஒருவரான பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி வீடு, அவரது உறவினர்களின் வீடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்தப் பத்திரப் பதிவில் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகள், ஒட்டன்சத்திரத்தில் உள்ள பத்திர எழுத்தர் மற்றும் நிலத்தரகர் உட்பட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளிலும் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையில் 3 குழுக்களாகப் பிரிந்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனையின் போது, மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



