புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.3.06 லட்சமாக உயர்வு: முதல்வர் ரங்கசாமி பெருமிதம்
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தனது அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தனிநபர் வருமானம் தற்போது ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்ட முழுமையான தானியங்கி மற்றும் கணினிமயமாக்கப்பட்ட புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய பால்வள வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதற்கான நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து ரூ.34.35 கோடி மதிப்பீட்டில் ஐஸ்கிரீம் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தினசரி உற்பத்தித் திறன் 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 6,200 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.11.66 கோடி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கப்பல் வழிகாட்டி, மரைன் பிட்டர் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மீனவ மாணவர்களின் முழு கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே செலுத்தும் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 நிதியுதவி, 2026 ஜனவரி முதல் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 65 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். அதேபோல், இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கத்தை இணைக்கும் மேம்பாலம் ரூ.483.51 கோடி மதிப்பீட்டில் அமைக்க மத்திய அரசு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் பணியாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூ.4,750 கோடி கடனுதவியுடன் புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் குடிநீர், சாலை, பாதாள சாக்கடை, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான ஆலோசனை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரூ.500 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.
பொதுப்பணித்துறையில் நேரடி நியமனம் மூலம் 74 இளநிலைப் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார். பிரதமரின் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி பேனல்கள் அமைக்க மத்திய அரசு வழங்கும் மானியத்துடன், புதுச்சேரி அரசும் கூடுதல் மானியம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 4,896 வீடுகளில் சூரிய மின் பேனல்கள் அமைக்கப்பட்டு ரூ.31.57 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். 2025-26 நிதியாண்டில் போக்குவரத்துத் துறை ரூ.200 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.59.09 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், புதுச்சேரியில் 132 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கான மாநில அளவிலான கடல்வழி வாணிப பெருந்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பிரதமரின் ஏக்தா மால் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து முதற்கட்டமாக ரூ.64.24 கோடி நிதியை கடந்த மே மாதம் விடுவித்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், சுற்றுலாத் துறையை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரங்கசாமி தெரிவித்தார். அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தொலைநோக்குத் திட்டங்களின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவுக்குப் பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், சிறப்பாக செயல்பட்ட அரசுத்துறைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழாவில் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து
புதுச்சேரியில் அரசு விழாக்களில் இதுவரை முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு தமிழ் மற்றும் சமூக அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததுடன், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற இன்றைய சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இரண்டாவதாக வந்தே மாதரம், அதன் பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரி சுதந்திர தின விழாவில் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



