அரசியல் நாகரிகத்தை காக்க வேண்டும்; குடும்பத்தினரை விமர்சிப்பது ஏற்க முடியாது: அண்ணாமலை
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமான பேச்சுகள் மூலம் தரம் தாழ்த்தும் போக்கு தொடர்ந்து நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று வீ த லீடார் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றாலும், அவை தனிப்பட்ட தாக்குதல்களாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாயார் குறித்து கருத்து தெரிவித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் இருப்பவர்கள் தங்களது வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பலாம் என தெரிவித்துள்ள அண்ணாமலை, இவை அனைத்தும் ஜனநாயகத்தின் இயல்பான அம்சங்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அரசியல் எதிர்ப்பை தனிப்பட்ட முறையில் கொண்டு சென்று ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய தரக்குறைவான கருத்துகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்ட அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரசியல் என்பது மக்களின் பிரச்சினைகள், கொள்கைகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் களமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மூன்றாம் தர அரசியலை முன்மாதிரியாகக் கற்றுக்கொடுக்கக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகம், பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயக மதிப்புகளை முன்னிறுத்தும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டியது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமை என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.



