“விவசாயிகள் பாவம் உங்களை சும்மா விடாது” – முதல்வர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எச்சரிக்கை
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை ஏமாற்றுவதாகவும், காவிரி நதிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முதல்வர் விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
ஒருங்கிணைந்த மதுரை அருகே செல்லம்பட்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு விவகாரத்தில் மெத்தனம் காட்டுவது மற்றும் காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கீட்டு நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பேசினர்.
வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்காக சுமார் ரூ.23 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி பொற்காலமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் இரண்டு மாதங்களாக காவிரி நீர் திறக்கப்படவில்லை என்றும், விஜய்யின் 100 நாள் ஆட்சியில் தமிழகத்துக்குரிய நீரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார். தற்போது உபரி நீர் மட்டுமே வருவதாக கூறிய அவர், கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஏற்படும் மோசமான சூழலைப் போன்ற நிலை, விஜய்யின் 100 நாள் ஆட்சியாலும் தமிழகத்தில் உருவாகியுள்ளதாக விமர்சித்தார்.
மேலும், கடந்த 100 நாட்களில் உண்மையான ஆட்சி நடைபெறவில்லை என்றும், ரீல்ஸ் ஆட்சியாகவே நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார். இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை மக்கள் கவனித்து வருவதாகவும், தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு, தற்போது அதை நிறைவேற்றவில்லை என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், விவசாயிகள் சந்தித்து வரும் துயரங்களை அரசு கண்டுகொள்ளாமல் தொழில் முதலீடு மற்றும் வெற்றி ஆட்சி குறித்து பெருமை பேசுவதாக குற்றம்சாட்டினார். “விவசாயிகள் பாவம் உங்களை சும்மா விடாது” என்று முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த அவர், பழனிசாமி முதல்வராக இருந்திருந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, படித்த இளைஞர்களுக்கு ரூ.4,000 மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக உதயகுமார் தெரிவித்தார். தற்போது பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை வழங்க ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும் என கூறப்படுவதாகவும், இந்த அறிவிப்புகள் முதல்வர் விஜய்க்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த மூன்று மாதங்களில் அரசு ரூ.22 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய உதயகுமார், இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்து மாநிலம் திவாலாகும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்தார். தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் ஏமாற்றத்தை அளித்துவிட்டதாக விமர்சித்த அவர், அதிமுகவினரை ஆசைவார்த்தைகள் கூறி கட்சியில் இருந்து இழுக்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், கட்சிக்காக தாங்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செல்லூர் கே.ராஜு பேசுகையில், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் நீதிமன்றத்தை நாடி தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்புகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத் தந்ததாக குறிப்பிட்டார். ஆனால், எதற்கெடுத்தாலும் வெற்றி என்று கூறும் முதல்வர் விஜய், அதிமுக ஆட்சியில் பெற்றுத்தரப்பட்ட வெற்றிகளை தற்போது பாதுகாக்க முடியவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 12 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 2021-ம் ஆண்டு 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார். இதுதவிர, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புயல்கள் உள்ளிட்ட பேரிடர்களின்போது விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும், சுமார் ஒரு கோடியே 58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.32,470 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போதைய சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த அவர், சட்டப்பேரவை மழலை சபை கூடமாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.



