பயிர்க்கடன் தள்ளுபடியில் நிபந்தனைகள் விதிக்கக் கூடாது: முன்னாள் அமைச்சர் வளர்மதி வலியுறுத்தல்
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.
பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது மற்றும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சார்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாநிலங்களவை உறுப்பினர் ம.தனபால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கனிதா சம்பத், ப.தன்சிங் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வளர்மதி, விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி செய்து, அறுவடை வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். எனவே, பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் பாதிக்கப்படும் எனக் கூறிய அவர், அணை கட்டும் முயற்சியைத் தடுக்க மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி நீர் உரிமைக்காக அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் வளர்மதி சுட்டிக்காட்டினார். சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் தமிழக முதல்வர் நேரடியாகப் பதிலளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து, அதிமுக வலுவான அமைப்பாக செயல்படும் என்றும், எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



