அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை விசாரிக்காமல் ஏற்றது சட்டவிரோதம்: உயர் நீதிமன்றத்தில் வாதம்
அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை சட்டப்பேரவைத் தலைவர் விசாரிக்காமல், அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது சட்டரீதியாக ஏற்புடையதல்ல என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக கொறடா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மரகதம் குமரவேல், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
கட்சித்தாவல் தொடர்பான நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. கிரி தனது வாதங்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், கடந்த மே 13-ம் தேதி சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ-க்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்த 30 நிமிடங்களுக்குள் தவெக-வில் இணைந்ததாக தெரிவித்தார்.
கட்சித்தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்த சூழலில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்கள் உண்மையிலேயே சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் பதவியை ராஜினாமா செய்தார்களா என்பதை சட்டப்பேரவைத் தலைவர் விசாரித்திருக்க வேண்டும் என்றும், அதன்பிறகே உரிய முடிவு எடுத்திருக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் வி. கிரி வாதிட்டார்.
ஆனால், எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவைச் செயலர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவிலும், ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் உடனடியாக தவெக-வில் இணைய உள்ளனர் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்ததாலேயே சட்டப்பேரவைத் தலைவர் எந்த விசாரணையும் நடத்தாமல் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என அதிமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை ஆளுங்கட்சியில் இணைக்கும் முயற்சியாகவே இதனை கருத முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், அவரது தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநருக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பு சட்டப்பேரவைத் தலைவருக்கு இல்லை என்றும், எனவே சட்டப்பேரவைச் செயலர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை சட்டப்பேரவைத் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் அதிமுக தரப்பு வாதிட்டது.
ராஜினாமா கடிதங்கள் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதற்கு சட்டப்பேரவைத் தலைவரே நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் வி. கிரி வலியுறுத்தினார். அதிமுக தரப்பின் வாதங்கள் முழுமையாக நிறைவடையாத நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



