அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக ரூ.8 கோடி பேரம்: போலி இ-மெயில் மோசடியில் 2 பேர் கைது
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரில் போலி இ-மெயில் கணக்கை உருவாக்கி, அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.8 கோடி பேரம் பேசியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த மோசடி முயற்சி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு கணினி சிபியு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக நிஸ்வாக் என்பவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அமைச்சர் பெயரில் வெங்கடேஷ் என்பவர் போலியான இ-மெயில் கணக்கை உருவாக்கியதுடன், ஆள்மாறாட்டம் செய்து போலியான மின்னணு ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், வேலூரைச் சேர்ந்த ரூபன் ராஜ் (27), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் (21) ஆகியோர் கடந்த ஜூலை மாதம் வெங்கடேஷுக்கு தெரிந்த தயாளன் என்பவரை அணுகியதாக தெரியவந்தது. தங்களுக்கு அமைச்சரை நன்கு தெரியும் என்றும், ரூ.8 கோடி வழங்கினால் வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஒருவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தர முடியும் என்றும் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தகவலை நம்பிய தயாளன், வெங்கடேஷ் மூலமாக சம்பந்தப்பட்ட தகவலை எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ரூபன் ராஜ் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலியான இ-மெயில் கணக்கை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அந்த இ-மெயிலில் இருந்து உறுதிப்படுத்தல் வந்ததாகக் காட்டும் வகையில் செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதனை வெங்கடேஷ் மூலம் வாட்ஸ்-அப்பில் அனுப்பி நம்ப வைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களுடன் எம்.எல்.ஏ. குழு வீடியோ அழைப்பில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி இ-மெயில் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் பணம் பறிக்க முயன்றதாக சந்தேகம் உறுதியானது.
இதையடுத்து வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ரூபன் ராஜ் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு கணினி சிபியு கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பேரம் பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



