நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்; பாஜக வெளிநடப்பு
நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு முறைக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். மருத்துவக் கல்வி என்பது சாதாரண தொழில்முறை கல்வி மட்டுமல்ல என்றும், மனித உயிர்களை காப்பாற்றும் முக்கியமான பணிக்கான கல்வி என்பதால், அதற்கான வாய்ப்பு பொருளாதார வசதியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியில் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தமிழகம் நீண்ட காலமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை பின்பற்றி வருவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்ற காலத்தில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கல்விக் கொள்கையின் பலனாகவே தமிழகத்தில் வலுவான பொதுச் சுகாதார கட்டமைப்பு உருவாகியுள்ளதாகவும், நாட்டின் சிறந்த பொதுச் சுகாதார அமைப்புகளை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளையில், நீட் தேர்வு முறையால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகம் பயன்பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நீட் பயிற்சிக்காக பல குடும்பங்கள் அதிகளவில் பணம் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார வசதி கொண்ட மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பை உருவாக்குவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள் அதே அளவிலான பயிற்சியை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கிறார்களா என்பதே தமிழகத்தின் அடிப்படையான கேள்வி என்றும் அவர் கூறினார்.
மேலும், நீட் தேர்வு முறை சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அவற்றை அதிகரிப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார். எந்த மாணவரின் மருத்துவக் கல்வி கனவையும் அரசு பறிக்க விரும்பவில்லை என்றும், திறமையுள்ள மாணவர்களின் எதிர்காலம் அவர்களது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அரசு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் 12 ஆண்டுகள் பெற்ற கல்வியை கருத்தில் கொள்ளாமல், ஒரே நாள் நடைபெறும் நுழைவுத் தேர்வு அவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நீட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.



