முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக தவெக புகார்
தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி புறநகர் மாவட்ட தவெக பொருளாளர் அருண்குமார் இந்தப் புகார் மனுவை எஸ்பி அலுவலகத்தில் அளித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 8-ம் தேதி மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார். அப்போது விசுவாசம் என்பது கொடி பறக்கும்போது கைதட்டுவது மட்டும் அல்ல என்றும், அந்தக் கொடி பறப்பதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து கொடியை நிலைநிறுத்துவதே உண்மையான விசுவாசம் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுகவை விஜய் கைப்பற்றவும் அழிக்கவும் நினைப்பதாகவும், அதிமுகவை யாரேனும் அழிக்க முயன்றால் அவர்களின் வம்சமே அழிந்து போகும் என்றும் உதயகுமார் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நீர் தொடர்பான விவகாரத்திலும், தவெக சார்பில் முன்வைக்கப்படும் கருத்துகள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சு தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவில், முன்னாள் அமைச்சர் தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் தொடர்பாக அவதூறான கருத்துகளை தெரிவிப்பதைத் தடுக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக சார்பில் காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து புகார் மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



