ஜார்க்கண்ட் பேரவை நோக்கி மாணவர்கள் பேரணி: தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சால் பரபரப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் இன்று சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்றனர். புதிய சட்டப்பேரவை வளாகத்தை நெருங்கிய போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்ற நிலையில், அவர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களை பயன்படுத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசி தடியடி நடத்தினர். இதனால் பேரவை வளாகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சித் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோவும் இந்தப் பேரணியில் பங்கேற்றார். உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே பேரணியில் கலந்து கொண்ட அவர், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உருவப்படத்தை கையில் வைத்திருந்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற சட்டப்பேரவை முற்றுகைப் பேரணியில் பேசிய தேவேந்திர நாத் மஹ்தோ, மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வராது என்றும், அது தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். ஒன்பது நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகும் ஆம்புலன்ஸ் மூலம் வந்து ஸ்ட்ரெச்சரில் பேரணியில் பங்கேற்றுள்ளதாகக் கூறிய அவர், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காமல் போராட்டத்தை ஒடுக்க காவல் துறையை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
அரசுடன் ஏற்கெனவே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும், மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், அரசு ஆட்டம் காணும் என்றும் அவர் எச்சரித்தார். போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், அது மக்கள் இயக்கமாக மேலும் விரிவடையும் என்றும் தேவேந்திர நாத் மஹ்தோ தெரிவித்தார்.
பழைய சட்டப்பேரவை கட்டிடத்துக்கு வெளியே காலை 10.30 மணியளவில் தொடங்கிய மாணவர்களின் பேரணி, பிற்பகலில் புதிய சட்டப்பேரவை வளாகத்தை நெருங்கியது. போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றபோதும், அவர்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடந்து முன்னேறினர். ஜெகந்நாத்பூர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த இறுதித் தடுப்பை பேரணி அடைந்தபோது, காவல் துறையினர் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களை பயன்படுத்தினர்.
பலமுறை தண்ணீர் பீய்ச்சி அடித்தபோதும் போராட்டக்காரர்கள் பின்வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர். தொடர்ந்து ஆறு முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தடியடியின்போது தலை, கைகள் மற்றும் முகத்தில் காவல் துறையினர் தாக்கியதாக போராட்டக்காரர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தின் பின்னணி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, கடந்த சில மாதங்களாக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு தரப்பில் இதுவரை ஆறு முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், மாணவர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதனிடையே, மாணவர் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் தேர்வுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஐடி சம்மன் அனுப்பிய நிலையில், அந்த மூன்று பேரின் ராஜினாமாவையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மாநில அரசுத் துறை தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வேலைவாய்ப்புக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இன்று சட்டப்பேரவையை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றுள்ளனர்.



